Our Feeds


Tuesday, March 8, 2022

ShortTalk

பசில் ராஜபக்க்ஷவின் தேசிய அரசு கோட்பாடு சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும்! - முகா எம்.பி. ஹரீஸ் வரவேற்பு



(அஸ்லம் எஸ்.மௌலானா)


அரசு மீது சுமத்தப்பட்டுள்ள இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ முன்வைத்திருக்கும் கோட்பாடானது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று (08) இடம்பெற்ற தேசிய பாடசாலை பிரகடன நிகழ்வு மற்றும் சர்வதேச மகளிர் தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பல விடயங்கள் கடந்த ஒரு சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.ஏனென்றால் இந்த நாட்டின் அரச கட்டமைப்பு என்பது இன்று ரஷ்ய, யுக்ரைன் போர் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ புதிய சிந்தனைக்குள் காலடி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவு சிறுபான்மை சமூகங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆட்சியாளர்களின் பார்வைக்குள் கிரமமாக வந்து கொண்டிருக்கின்றன, அதன் அடிப்படையில்தான் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ புதிய கோட்பாடு ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்திருக்கின்றார்.

இதன்மூலம் அரசு மீது சுமத்தப்பட்டுள்ள இனவாத சாயத்தை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்திட்டத்தை அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவரவர் சொந்த பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அடக்கம் செய்யலாம் என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

உண்மையில் எமது நாடு இப்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தீர்க்க்கப்பட வேண்டுமானால் இந்த நாடு அனைத்து சமூகத்தினரும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாடாகவும் இனவாதமற்ற அரசாங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் என்கிற யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறது.

இவ்வாறான மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றபோதே இந்தியா, ஆசியா, ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று, பொருளாதார பின்னடைவுகளை சீர்செய்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற பார்வையை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் மட்டம் இன்று உணர்ந்திருக்கிறது.

முஸ்லிம் சமூகம் ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட பல மோசமான, பூதாகரமான விடயங்களுக்கு முகம்கொடுத்தபோது பலரும் அஞ்சிய வேளையில், எந்த அரசாங்கமானாலும் பரவாயில்லை எமது சமூகப் பிரச்சினைகளை அவர்களுடன் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் மிகவும் தைரியமாக நாங்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பிலான அரசின் நிலைப்பாட்டில் அடுக்கடுக்காக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த மாற்றத்தின் ஊடாக அரசுக்கு எமது சமூகத்தின் மீதான நல்லெண்ண பார்வை ஏற்படும் என்பதுடன் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறே எமது பிராந்திய அபிவிருத்திகளுக்கும் அரசு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் என நம்பிக்கை கொள்ள முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »