Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

உக்ரைன் ஜனாதிபதி தலைக்காட்டும்போது பஸில் பதுங்குவது ஏன்? சபையில் மூண்ட சர்ச்சை! நடந்தது என்ன?

 

” கடும் போர்மூண்டுள்ள நிலையில்கூட உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர் கடந்த மூன்று மாதங்களாக, நிதி நிலைவரம் பற்றி நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது. எனவே, நிதி அமைச்சர் தற்போதைய நிலை பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர். இதனால் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் கடும் சொற்சமர் ஏற்பட்டது.


 
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல,

” நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. கடைசியாக டிசம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். 3 மாதங்களாக நிதி நிலைமை பற்றி தெளிவுபடுத்தவில்லை. நாட்டில் தற்போது நெருக்கடி நிலைமை இருக்கின்றது. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது.


 
நாடாளுமன்ற சிறப்புரிமையை காக்கும் பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கின்றது. எனவே ,நிதி அமைச்சரவை நாடாளுமன்றம் வந்து, நிலைமையை தெளிவுபடுத்துமாறு சபாநாயகர் கட்டளையிட வேண்டும். நிதி அமைச்சர் வெளிநாடு சென்று பிச்சை கேட்கின்றார். போர் சூழ்நிலையில் ரஷ்யாவிடம்கூட கடன் கேட்கின்றனர்.” – என்று கோரிக்கை விடுத்தார் .

இதன்போது குறுக்கீடு செய்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

” எந்நாளும் காலையில் உளறுவது எதிரணி பிரதம கொறடாவுக்கு வழமையாகிவிட்டது. இன்றும் அதனையே செய்கின்றார். நிதி அமைச்சர் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கின்றார். நிதி அமைச்சரின் சார்பில், நிதி இராஜாங்க அமைச்சர் பதில்களை வழங்கிவருகின்றார். எனவே .எதிரணி பொய்யுரைக்கின்றது. ” – என்றார்.


 
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர், நளின் பண்டார,

” போர் நடைபெறும் உக்ரைனில், அந்நாட்டு ஜனாதிபதிகூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். எமது நாட்டு நிதி அமைச்சரவைக் காணவில்லை.” -என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர்,

” நாடாளுமன்றத்துக்கு வருமாறு உறுப்பினர்களுக்கு கட்டளையிட முடியாது. அறிவிப்பு விடுக்குமாறு அமைச்சருக்கு உங்களால் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக சபைக்கு வராவிட்டால், நிலையியற் கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கலாம்.” – என்றார்.

” சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதன்போது இவ்விவகாரம் பற்றி கலந்துரையாடலாம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் சாந்த பணடார தெரிவித்தார்.

அத்துடன், நாடு வங்குரோத்து அடையவில்லை. எனவே, பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது என வெளியான அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »