Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

அடுத்த சோகம் | வவுனியா – கணேசபுரத்தில் காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!



வவுனியா கணேசபுரம் 8ம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவனைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

உறவினர்களால் நெளுக்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.

அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்தனர்.

குறித்த பகுதியில் இரானுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தமையுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »