மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4,000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (27) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த ஜனவரி முதல் இம்மாதம் வரை ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் மாத்திரமே எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை.
பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது. எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன என்றார்.
