Our Feeds


Saturday, June 4, 2022

SHAHNI RAMEES

21ஆவது திருத்த வரைபு தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் பெரும்பாலானவைக்கு இணக்கப்பாடு!

 

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் இரட்டை குடியுரிமை விவகாரம்,பிரதமர் பதவி நீக்கம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சு பதவி வகித்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. திருத்தங்களுடனான முழுமையான சட்டமூல வரைபை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை பூரணமற்ற வகையில் கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதால் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படை இலட்சினங்கள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் சகல கட்சிகளும் முன்வைத்துள்ள திருத்த யோசனைகள் குறித்து கலந்துரையாடுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்க்ஷ கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை கோரியபோது,பிரதமர் எமது தரப்பு நிலைப்பாட்டை குறிப்பிடுவார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதியமைச்சர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்த 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் ஒரு சிலவற்றை திருத்தம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.அந்த யோசனைகள் பரிசீலனை செய்யப்பட்டு இழுபறி நிலையில் இருந்து நான்கு பிரதான விடயங்களுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.



இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்,ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,

அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்,10ஆவது நாடாளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்)

தற்போதைய 9ஆவது நாடாளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும், அடுத்த நாடாளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்றில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்ப்பை கருத்திற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த 21ஆவது திருத்த வரைபு தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் பெரும்பாலானவை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லாத விடயங்களை செயற்படுத்த அவதானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,எரான் விக்கிரமரத்ன, தலதா அதுகோரல,திகாம்பரம்,ரவூப் ஹக்கீம்,ரிஷாத் பதியுதீன்,மனோ கணேசன் ஆகியோரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், சுயாதீன கட்சி சார்பில் அத்துரலியே ரத்ன தேரர், அனுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர,நிமல் சிறிபால டி சில்வா,பைஸர் முஸ்தபாவும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »