(எம்.எப்.எம்.பஸீர்)
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை இன்று (28) விசாரணைக்கு அழைத்த சிஐடியின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணைகளை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.
கடந்த வருடம் ( 2021) செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி விமானப்படை உளவுப் பிரிவு அளித்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஊடகவியலாளர் நடத்தி செல்லும் ‘ சட்டன ‘ எனும் யூ ரியூப் அலைவரிசையில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களின் தலைப்பும் அவற்றின் உள்ளடக்கமும் ஒன்றுடன் ஒன்று பொருத்தவில்லை எனக் கூறி இவ்விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தை விமர்சிக்கும் வண்ணம் குறித்த வீடியோக்கள் அமைந்துள்ளதாக விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டு, வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.
இன்று 9.00 மணிக்கு சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணை அறையின் உப பொலிஸ் பரிசோதகர் மதுஷங்க முன்னிலையில் ஆஜரான ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிடம் பிற்பகல் ஒரு மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.
இதன்போது சிஐடிக்கு முன்பாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பட்டாளர்களும் சேர்ந்து அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், கருத்துச் சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
சிஐடி விசாரணைகளின்போது ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவுடன் சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க சிஐடியில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
