(எம்.ஆர்.எம்.வசீம்)
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக வழங்குவதாக தெரிவித்த எரிபொருளையும் சேர்த்து அரச போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கு விநியோகிக்கப்படுறது. இது இரு தரப்பினரிடையே பாரிய மோதல் நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயமாகும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய (15) தினம் தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை நூற்றுக்கு 80 சத வீதம் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் இல்லாமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பயணிகள் போக்குவரத்து சேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் எற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து சேவை பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகிறது. சில வீதிகளில் வழமையாக 20முதல் 25 தனியார் பஸ்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றபோதும் இன்றைய 2 பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன.
அதேபோன்று கிராமப்புறங்களில் பயணிகள் பஸ் சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த பிரதேசங்களில் எரிபொருள் முற்றாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
