Our Feeds


Monday, June 6, 2022

SHAHNI RAMEES

“நோரோ” வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள், தடுப்பு வழிகள் என்னென்ன?



கேரள மாநிலம் வயநாட்டில் நோரோ வைரஸ் வேகமாக பரவிவரும்

நிலையில் அந்த வைரஸ் குறித்தும், அதன் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிகள் குறித்து பார்க்கலாம்.


நோரோவைரஸ் இரைப்பை குடல் நோயை ஏற்படுத்துகிறது, இதில் வயிறு மற்றும் குடலின் உட்புறத்தின் வீக்கம், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.


நோரோ வைரஸ் ஆரோக்கியமானவர்களை பெரிதாக பாதிக்காது, ஆனால் இது இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.


நோரோ வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் எளிதில் பரவுகிறது. வயிற்றில் வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரால் தயாரிக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உணவை சாப்பிடுவதன் மூலமும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மலம் மற்றும் வாந்தி மூலம் வைரஸ் பரவுகிறது.

 

நோரோ வைரஸ் - அறிகுறிகள்


வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அதிக வெப்பநிலை, தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோவைரஸின் பொதுவான அறிகுறிகள். கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மற்றும் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.




நோரோ வைரஸ் - தடுப்பு முறை


கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நோரோவைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், வாய்வழி ரீஹைட்ரேஷன் கரைசல்கள் (ORS) மற்றும் காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.


சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். விலங்குகளுடன் பழகுபவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.



குடிநீர், கிணறுகள் மற்றும் சேமிப்பு தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு குளோரினேஷன் செய்ய வேண்டும். மக்கள் வீட்டு உபயோகத்திற்கு குளோரின் கலந்த நீரை பயன்படுத்த வேண்டும் மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். 


பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். கடல் மீன் மற்றும் நண்டு மற்றும் மசல்ஸ் போன்றவற்றை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும். திறந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »