Our Feeds


Friday, June 3, 2022

SHAHNI RAMEES

துமிந்த சில்வாவுக்கு வலிப்பு நோயாம்! - முதற் தர சிகிச்சை அறைக்கு மாற்றம்.

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் அவர், ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதி செய்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையிலடைக்குமாறு சிஐடி பணிப்பாளருக்கு கடந்த மே 31 ஆம் திகதி கட்டளையுமிட்டது.



அதன்படியே நேற்று முன்தினம் ( 01) மாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்ற சிஐடி சிறப்புக் குழு ஆர். துமிந்த சில்வாவை கைது செய்திருந்ததுடன், இரவோடிரவாக அவரை சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பினில் ஒப்படைத்தது.

கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளைத் தொடர்ந்து பல பிரமுகர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அப்போது துமிந்த சில்வாவும் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார். எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மீள நாட்டுக்கு வந்திருந்த நிலையில், கடந்த மே 31 ஆம் திகதி உயர் நீதிமன்றின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்ரீஜயவர்தன புர வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்பு வலி எனப்படும் வலிப்பு நோய் காரணமாக அவர் இவ்வாறு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க நோயாளர் அறையில் ( வோட்) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலையின் பின்னரான நிலைமையின்போது அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மகேஷி விஜேரத்ன தலைமையிலான குழுவினர் அவருக்கு அங்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ( 1) முழுதும் துமிந்த சில்வாவுக்கு, பிசிஆர் பரிசோதனை ஒன்றும், ஒரு எக்ஸ்ரே பரிசோதனையும் செய்யப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், நேற்று ( 2) அவர் 18 ஆம் இலக்க சிகிச்சை அறையிலிருந்து 3 ஆம் இலக்க சிகிச்சை அறையில் உள்ள முதற் தர சிறப்பு சிகிச்சை பகுதிக்கு ( வோர்ட்) மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவர் அவ்வாறு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »