நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வழிமுறை 21 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
தமது கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இவ்வாறு கூறியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கூறியதாகவும் காரியவசம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பிரச்சினை இல்லை எனவும் ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை, அதிகாரம் இல்லாத பிரதமருக்கு வழங்குவதை தமது கட்சி நிச்சயமாக எதிர்ப்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
