Our Feeds


Wednesday, June 15, 2022

SHAHNI RAMEES

இன்று முதல் கொழும்பில் “Park and ride” திட்டம் அமுல்..!

 

கொழும்பில் இன்று முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பில் இருந்து மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த வரை பேருந்து பயணிக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Park and ride என்பது தங்கள் சொந்த வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளும் கொழும்பு புறநகர் வாழ் மக்கள் அதனை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகரத்திற்கு பயணிக்க முடியும்.அதற்காக சொகுசு பேருந்து சேவைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


காலை 6 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை குறித்த 3 இடங்களில் இருந்து பேருந்துகள் பயணிக்கின்றது. பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலும் இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் சேவையில் ஈடுபடும். இடைப்பட்ட காலப்பகுதியில் மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒரு பேருந்து பயணிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வருகின்றது.

வாகன சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கொழும்புக்கு வருவதற்கு வசதியாக மற்றும் பாதுகாப்பான பேருந்து சேவைகளை வழங்குவதன் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »