(எம்.எப்.எம்.பஸீர்)
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (01) குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளும் அந்த வழக்கில் பகிரங்க மன்னிப்புக்கோர ஞானசார தேரர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் பரிசீலனை செய்யப்படவிருந்தது.
இந்நிலையிலேயே நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, நீதிச் சேவைகள் ஆணைக் குழுவினால் கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கு அமைய இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே எதிர்வரும் ஆகஸ்ட் 26 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் ஹாஜியார் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3ம் இலக்க அறை) முன்னிலையில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 8 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
