ஸிம்பாப்வேயின் நாணயமாக தங்க நாணயங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 25 ஆம் திகதி முதல் இத்தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும் என ஸிம்பாப்வே மத்திய வங்கி ஆளுநர் ஜோன் மங்குடியா அறிக்கையொன்றில் தெரவித்துள்ளார்.
இந்த நாணயத்துக்கு மோசி ஓவா துன்யா () என பெயரிடப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் பிரசித்தி பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி மோசி ஓவா துன்யா என உள்ளூர் மொழிகளில் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நீர்வீழ்ச்சியின் பெயரே இந்த தங்க நாணயத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 80 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக ஸிம்பாப்வே மத்திய வங்கி கடந்த வாரம் அதிகரித்தது. அத்துடன் எதிர்வரும் 5 வருடங்களுக்கு அமெரிக்க டொலரை சட்டபூர்வ நாணயமாக பயன்படுத்துவதற்கான திட்டமொன்றையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
