Our Feeds


Tuesday, July 5, 2022

ShortNews

இவ்வருடம் முதல் மக்காவிலிருந்து அரபா தின சொற்பொழிவு தமிழிலும் ஒலிக்கும்: அரப் நியூஸ் தகவல்



இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரபா தின சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு, மக்காவிலிருந்து நேரலையாக தமிழ் மொழியிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வருகிறது.


இந்த சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி – இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று, மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித பள்ளிவாசல்களுக்கான பொது தலைவர் அப்துல் ரகுமான் அல் – சுதைஸ் தெரிவித்துள்ளார் என்று ‘அராப் நியூஸ்’ தெரிவிக்கிறது.


அரபா தினம் – ஹஜ் மாதத்தின் 09ம் திகதியன்று அனுஷ்டிக்கப்படுகிறது.


மக்காவில் உள்ள அல் நிம்ரா மசூதியில் நிகழ்த்தப்படும் அரபா தின சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.


ஏற்கெனவே ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்ய மொழி, சீன மொழி, வங்க மொழி, துருக்கிய மொழி மற்றும் ஹவுசா ஆகிய பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் சூழலில், இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அல் – சுதைஸ் தெரிவித்துள்ளார்.


இந்த மொழிபெயர்ப்பு – முதல் ஆண்டு 10 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு 01 கோடியே 10 லட்சம் பேருக்கும், மூன்றாம் ஆண்டு 50 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு 10 கோடி பேருக்கும் பயனாக இருந்தது என்று கூறும் அல் – சுதைஸ், இந்த ஆண்டு 20 கோடி பேருக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார் என அராப் நியூஸ் ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »