(க.கிஷாந்தன்)
மலையக பிரதேசங்களில் இன்று (03) அதிகாலை முதல் கடுமையான மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சமண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக இப்பகுதியில் 21 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
வீடுகளுக்கு அருகில் உள்ள கலபொட ஆற்றிற்கு நீர் வழங்கும் ஐட்றி ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும், தோட்டத்தில் உள்ள விஹாரையிலும் தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை இப்பகுதி கிராமசேவகர் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் கவனத்துக்கும், மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.