Our Feeds


Thursday, September 15, 2022

ShortTalk

ஈஸ்டர் தின தாக்குதல்கள் | முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிரான 107 வழக்குகளையும் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் சார்பில் கோரிக்கை!



(எம்.எப்.எம்.பஸீர்)


போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 107 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் சார்பில் கோரப்பட்டுள்ளது.


கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா முன்னிலையில், சட்ட மா அதிபர் சார்பில் நேற்று முன் தினம் (13) இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில் நட்ட ஈடு செலுத்தும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரியுள்ளார்.

இந்த தாக்குதலால் உயிரிழந்த மற்றும் நிரந்தர பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு நட்ட ஈடு செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அந்த நட்டஈட்டை வழங்கும் வரையில், அவர்களுக்கு கருணை அடிப்படையில் கொடுப்பனவு ஒன்றை வழங்க அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவ்வாறான நிலையில் முறைப்பாட்டாளர்கள் அக்கொடுப்பனவை பெற இதுவரை விண்ணப்பிக்கவில்லை எனவும் சட்ட மா அதிபர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது கடந்த 2019 ஏப்ரல் 22 ஆம் திகதி முன்வைத்துள்ள 2019/04 ஆம் இலக்க அமைச்சரவை பத்திரத்துக்கு, ஏப்ரல் 24 ஆம் திகதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு செலுத்தப்படும் எனவும் சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, தாக்குதல்கலில் உயிரிழந்த, நிரந்தர பாதிப்புக்களுக்கு உள்ளான நபர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சொத்து சேதங்கள் தொடர்பில் 5 இலட்சம் ரூபாவும் அதிகபட்சமாக நட்ட ஈடாக செலுத்த அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த நட்ட ஈடு செலுத்தும் நடவடிக்கை பொறுப்பு, இழப்பீட்டுக்கான அலுவலகத்திடம் ஒப்படைப்பதற்கும் அமைச்சரவை தீர்மானத்தின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் குறித்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மனு தொடர்பில் தமது சேவை பெறுநர் பதிலளிக்க உத்தேசிக்கவில்லை எனவும், அவர் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எனும் ரீதியில் அரசியலமைப்பின் 35/1 ஆம் உறுப்புரிமை பிரகாரம் விடுபாட்டுரிமைக்கு உட்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டினர். அதனால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அவர்கள் கோரினர்.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனை ஒத்த வாதத்தை முன்வைத்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அந்த விடயம் தற்போது சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

மனுதாரர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஷமீல் பெரேரா ஆஜராகும் நிலையில், பிரதிவாதிகளில் சிலருக்காக சட்ட மா அதிபர் சார்பிலான சட்ட வாதி ஒருவர் ஆஜராகிறார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக ஜனாதிபதி சட்டததரணி பாயிஸ் முஸ்தபா பிரசன்னமகின்றார்.

அதன்படி இந்த மாவட்ட நீதிமன்ற வழக்குகள் மீள நவம்பர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறுமதி 1250 மில்லியன் ரூபாவாகும்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கட்டுவபிட்டிய தேவாலயம் மீது நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 182 பேர் நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்குகளிலும் பிரதிவாதிகளாக,
முன்னள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையும் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகள்க பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »