Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெட்கமில்லை! - தி இந்து பத்திரிக்கையில் சந்திரிக்கா கடும் விமர்சனம்!



இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, இரண்டு ராஜபக்சர்களின் ஆட்சிகளின்போது மேற்கொள்ளப்பட்ட ஊழல்களின் விளைவாகும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.


அத்துடன் இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி ஒரு புரட்சியாகும் என்று அவர் இந்தியாவின் தி ஹிந்துவிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை திவாலானமைக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழல்களே காரணமாகும்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்களின் கட்சியை நம்பியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு செயற்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்கள், உண்மையிலேயே உற்சாகமாக இருந்தன என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி, புதிய முகங்கள் மற்றும் சரியான தொலைநோக்கு பார்வை கொண்ட புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும்.

போராட்டக்காரர்கள் தம்மை சந்தித்தபோது, அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் சில நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையை அமைப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாட்டை தாம் பரிந்துரைத்ததாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

அதில் குடியியல் சமூக அமைப்புகள், தனியார் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மரியாதைக்குரிய தனிநபர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரச சபை உருவாக்கப்படும்.

அது அரசாங்கத்தின் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 40% இளைஞர்களிடமிருந்தும் 40 வீதம் பெண்களிடம் இருந்து வர வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து மூளைசாலிகள் வெளியேறுகின்றனர். இந்த ஆண்டு சுமார் 140,000 இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது மிகவும் துயரமானது.

பொருளாதாரக்கொள்கையை பொறுத்தவரையில், அனைத்து இறக்குமதிகளையும் நிறுத்திவிட்டு இலங்கையில் அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறுவது யதார்த்தமானதல்ல.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன பொருளாதாரத்தை கண்மூடித்தனமாக திறந்துவிட்டார்.

இதன் காரணமாக இலங்கையின் சமூக கட்டமைப்புகள் அனைத்தும் உடைந்தன. அனைத்து வகையான அயோக்கியர்களும் நாடாளுமன்றத்திற்குள் வந்தனர் என்றும் சந்திரிகா குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்களால் ராஜபக்சர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்ததில் தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் சென்றிருக்க மாட்டார்கள்.

எனினும் அவர்கள் வெட்கமில்லாமல் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் சந்திரிகா தெரிவித்தார்.

ஹிரு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »