Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு – மனோ கணேசன்..!



22 ஆம்  திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு

அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார்.


நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் மனோ எம்பி கூறினார்.


இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மேலும் கூறியதாவது,


இரட்டை குடியுரிமை கொண்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது.


சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பெசில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாம் ஒருபோதும் இடம் தர மாட்டோம்.


பெசில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரசில் இடம் தேடி கொள்ளட்டும்.


அதேவேளை பாராளுமன்றத்தை, அடுத்த வருட முதல் காலாண்டில் கலைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் தரும், “இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாது.


இந்நாட்டு மக்கள் இன்று, இந்த நாடாளுமன்றத்தை மாற்றி, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறார்கள்.


ஆகவே, இரண்டரை வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்து விடப்படுவதை நாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிக்கிறோம்.


அதேவேளை, நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால், அதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மறுக்க முடியாது.


அதை அவர் ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்.


ஆகவே  அடுத்த வருடம் தேர்தல் மேகம் சூழும். புதிய மக்களாணையை பெற கட்சிகள் தயாராக வேண்டும்.


தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் இருக்கிறது. அந்நிலையை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »