Our Feeds


Tuesday, October 4, 2022

SHAHNI RAMEES

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக செயற்பட்டால் அதன் பிரதிபலனை அரசாங்கம் விரைவில் அனுபவிக்கும்! - சாணக்கியன்



பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளை அடக்குவதற்கு அரசாங்கம் அவர்களை பின்தொடர்கிறது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் அதன் பிரதிபலனை அரசாங்கம் வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (04) செவ்வாய்க்கிழமை நடைபபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை பின்தொடர்ந்து செல்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதற்காக மக்கள் அபிப்பிராயத்தை கோரும் வகையில் காங்சேசன்துறை தொடக்கம் தங்காலை வரை கையெழுத்து சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டோம்.


அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது.நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதற்கு தீர்வு காண அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு பலமுறை வலியுறுத்துகிறோம். 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் முதலீடுகளை தடை செய்தார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அத்தடையை நீக்கினார்.அடுத்த ஜனாதிபதி எவ்வாறு செயற்படுவார் என்பதை எம்மால் குறிப்பிட முடியாது. நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் இந்த அரசாங்கமும் நெடுநாள் பதவியில் இருக்காது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »