Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி கர்ஸாயின் சகோதரர் தலிபான் அரசாங்கத்தினால் கைது!



ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயின் சகோதரர்  மெஹ்மூத் கர்ஸாயை தலிபான்கள் கைது செய்துள்ளனர் என ஆப்கான் செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.


காபூல் விமான நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார் என ஆப்கானிஸ்தானின் காமா பிரெஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

துபாய்க்கு செல்வதற்காக ஆரியானா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏறிய நிலையில் மெஹ்மூத் கர்ஸாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002 முதல் 2010 மே வரை ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஹமீட் கர்ஸாய். கந்தகார் மாகாணத்தில் அய்னா மினா எனும் நவீன நகரை நிர்மாணித்தவர் அவரின் சகோதரர் மெஹ்மூத் கர்ஸாய்.

அய்னா மினா நகர திட்டத்திற்காக  அரச காணிகளை கைப்பற்றியதாக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி குற்றம் சுமத்தியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய், தலிபான்களை விமர்சிக்கும் விதமாக தெரிவித்த கருத்துகளே அவரின் சகோதரர் மெஹ்மூத் கர்ஸாய் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளத.

கடந்த செப்டெம்பர் மாதம் பாஞ்ஷீர் பிராந்தியத்தில் தேசிய எதிர்ப்புப் படையணிக்கும் ஆப்கான் அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்பிலும் தலிபான்களை ஹமீட் கர்ஸாய் விமர்சித்திருந்தார்.

இதேவேளை சட்ட விவகாரங்கள் காரணமாக மெஹ்மூத் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரச பேச்சாளர் பிலால் கரீமி  தெரிவித்துள்ளார். எனினும்  மெஹ்மூத் கர்ஸாய் கைது செய்யப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »