Our Feeds


Sunday, November 13, 2022

ShortTalk

வட கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் தொடர்ந்தும் எதிர்ப்பது ஏன்? - விளக்கக் கட்டுரை.(ஏ.எல்.நிப்றாஸ்) 


அது முஸ்லிம்களும் தமிழர்களும் வாழும் பகுதி. கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மழைக்காக ஒதுங்கிய தேனீர்க் கடையில் இருசமூகங்களையும் சேர்ந்த இருமுதியவர்கள் சற்று சத்தமாகவே அரசியல் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது. 

“உங்களுடைய தீர்வுத் திட்டத்திற்காக தமிழ் எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றும் சமஷ்டி வேண்டும் என்றும் குரல் கொடுத்துத் கொண்டிருக்கின்றார்கள். எங்கட முஸ்லிம் எம்.பி.க்களும் இருக்காங்களே…… இது பற்றியெல்லாம் வாயைத் திறக்கவே மாட்டானுகள்” என்ற பெருமூச்சோடு தொடங்கி, விமர்சித்தார். அவரது தமிழ் நண்பா இலேசாக சிரித்துக் கொண்டார். 

இது தனியொரு முஸ்லிம் நபருடைய மனக் கிடக்கையல்ல. இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கமும் இதுதான். ஆனாலுமென்ன? அப்படியானவர்களைத்தான் முஸ்லிம் சமூகம் தங்களது அரசியல் தலைமைகளாக தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது. 

எது எப்படியிருந்தாலும், முஸ்லிம் தலைவர்களோ எம்.பி.க்களோ முக்கியமான தருணங்களில் மௌனம் காத்துவிட்டு, கடைசி நேரத்தில் ஓடோடி வந்தாலும், முஸ்லிம் சமூகத்திற்கு என்றொரு நிலைப்பாடும் அபிலாஷையும் இருக்கின்றது என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது. 

தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினைத் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவர்களது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. அதன் காரணமாகவே தமிர்களின் விடுதலை போராட்டத்தில் கணிசமான முஸ்லிம் இளைஞர்களும் நேரடியாக இணைந்து போராடினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற அட்டூழியங்கள், பள்ளிவாசல் படுகொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் போன்ற கசப்பான அனுபவங்களுக்குப் பிறகுதான், முஸ்லிம்கள் இந்த ஆதரவை விலக்கிக் கொண்டு தனியொரு அடையாளத்துடன் பயணிக்க வேண்டி ஏற்பட்டது என்பதையும், இதையெல்லாம் தாண்டியும், இன்று வரை மானசீக ஆதரவு தொடர்கின்றது என்பதையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 

நெடுங்காலமாக பல்வேறு இழப்புக்களை சந்தித்த சகோதர தமிழ் மக்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது, மற்றைய சிறுபான்மை இனம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கும் சந்தோசமே. அத்துடன் இதனால் இரு தரப்பிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு முஸ்லிம்கள் நிறையவே இழந்திருக்கின்றார்கள். ஆனால், ஆனால். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதை எந்த அடிப்படையிலும் முஸ்லிம்கள் விரும்பவில்லை. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ, மக்கள் காங்கிரஸ் தலைவரோ அல்லது முஸ்லிம் எம்.பி.க்களோ வழக்கம்போல இது விடயத்திலும் வாழாவிருந்தாலும், ‘அது நடக்காது, நடக்கும் போது அதுபற்றிப் பேசலாம்’ என்று வாய்மூடி இருந்தாலும் இதுதான் நிதா்சனமான நிலைப்பாடாகும். இதில் மறைப்பதற்கோ பூசி மொழுகுவதற்கோ ஒன்றுமில்லை. 

தமது உரிமைக்காக தமிழ் மக்கள் செய்த, செய்து கொண்டிருக்கும் தியாகங்கள் அளப்பரியன. அதுமட்டுமன்றி, இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, சமஷ்டி, அதிகாரப்பகிர்வு பற்றியெல்லாம் இந்த நிமிடம் வரை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் சிவில் சமூகமும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. 

அந்த வரிசையில், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்பு பற்றிய கதையாடல்களும் இப்போது மீளவும் மேல் எழுந்துள்ளன. அரசியல்வாதிகள் இதுபற்றி பேசுவது ஒருபுறமிருக்க தமிழ் மக்கள் மத்தியிலும் இதுபற்றிய கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட ‘100 நாள் செயல்முனைவு’ என்ற வெகுஜன முன்னெடுப்பின் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூட, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலேயே சமஷ்டி மற்றும் பிரிக்கப்படாத அதிகாரப் பகிர்வு வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த கவனிப்பிற்குரியது. 

‘தமிழ் மக்களுக்கு இதோ தீர்வு வரப்போகின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறினாலும், ‘இனப் பிரச்சினைக்கு இன்னும் சில மாதங்களுக்குள் தீர்வை வழங்குவோம்’ என்று நாட்டின் ஜனாதிபதிதான் கூறினாலும், இலங்கைச் சூழலில் அரசியல் யதார்த்தம் என்னவாக இருந்து வருகின்றது என்பதை தனியாக விபரித்துச் சொல்ல வேண்டியதில்லை. 

உண்மையில் சாதாரண தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தீர்வை விட முன்னுரிமையாக தீர்க்கப்பட வேண்டிய வாழ்வியல் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உள்ளன. அதனையும் தாண்டி அவர்கள் சமஷ்டி போன்றதொரு தீர்வுக்காக போராடுவது அவர்களது அர்ப்பணிப்பாகும். ஆதனடிப்படையில், நியாயமான தீர்வு வழங்கி இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் முஸ்லிம் சமூகமும் நினைக்கின்றது. 

ஆனால், வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பதற்கான எந்த முயற்சியையும் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த சமூகமாக ஆட்சேபிக்கின்றனா; என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதற்கு தமிழர் தரப்பில் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இணைக்கப்படக் கூடாது என்பதற்கு முஸ்லிம்கள் தரப்பில் ஆயிரத்தெட்டு காரணங்கள் உள்ளன. 

வடக்கையும், கிழக்கையும் மீள இணைத்தால், அதனை மையப்படுத்தி தீர்வை வழங்கினால் தமிழ் மக்களிள் ஆட்புல எல்லை அதிகரிக்கும், அவர்களது சனத்தொகை வீதாசாரம் அதிகரிக்கும், காணி போன்ற அதிகாரங்கள் உள்ளடங்கலாக இன்னும் பல நன்மைகள் கிடைக்கலாம். 

அதேநேரம், வடக்கில் தற்போது தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளது போல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 

இந்நிலையில், வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டால் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களின் வீதாசாரம் குறைவடையவே வாய்ப்புள்ளது. 

இது பிரதிநிதித்துவ பங்கீடு, அதிகார கையளிப்பு, உள்ளிட்ட பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு பாதக விளைவை ஏற்படுத்தும். அத்துடன், இவ்விணைப்பு பற்றிய கதைகளை முஸ்லிம்கள் கடந்தகால அனுபவத்தோடு தொடர்புபடுத்தி நோக்குகின்றனர். அதாவது, இணைந்த வடக்கு, கிழக்கில் ஆட்சி எப்படியிருக்கும் என்பதை முஸ்லிம்கள் மீட்டிப் பார்க்கின்றார்கள்.  

வரதராஜ பெருமாளை முதலமைச்சராகக் கொண்ட இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களும் அங்கம் வகித்த போதும், அக்காலத்திலேயே முஸ்லிம்கள் கடுமையாக தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அரசியல் தரப்புகளாலும் கசப்பான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர் என்பதே வரலாறாகும். 

இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அச்சமிகு காலமாக இன்னும் முஸ்லிம்களின் மனதில் உள்ளது. இருப்பினும், இவ்விரு மாகாணங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நிலைமை மாறியதுடன் முஸ்லிம்களுக்கு ஒப்பீட்டளவில் பல அனுகூலங்களம் கிடைத்தன. எனவே மீண்டும் பழைய கையறுநிலைக்கு திரும்பிச் செல்ல கிழக்கு முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். 

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்ற ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகளை தவிர வேறு முஸ்லிம் எம்.பிக்கள் வடக்கு,கிழக்கு இணைப்பை பகிரங்கமாக எதிர்க்கவில்லை என்றாலும், ஒருவேளை எதிர்காலத்தில் நித்திரையில் இருந்து துயிலெழுந்தவனைப் போல அவர்கள் எதிர்ப்பு அறிக்கை விட்;டாலும் விடவில்லை என்றாலும், எப்போதும் முஸ்லிம் சமூகத்தின் நிலைமாறாத நிலைப்பாடு இதுவே. 

இதனையும் மீறி, இந்தியாவின் அழுத்தத்தினாலோ, வேறு காரணங்களாலோ இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டால் அல்லது அதற்கு சமமான ஒரு ‘ஏற்பாடு’ மேற்கொள்ளப்பட்டால், அதில் முஸ்லிம்களுக்குரிய ‘பங்கு’ என்னவாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விடயம். 

ஆனால், முதலாவது விடயம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதை மேற்சொன்ன நியாயபூர்வமான காரணங்களின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் அடிப்படையில் விரும்பவில்லை என்பதாகும். 

இவற்றையெல்லாம் வக்கற்ற முஸ்லிம் தலைமைகள் தலைவர்கள், எம்.பி.க்கள் தெளிவாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இதனை அரசாங்கமும் தமிழ் தரப்பும் தெளிந்த மனதோடு விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக, இது தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்கு எதிரான நிலைப்பாடு என தவறாக புரிந்து கொள்ளத் தேவையில்லை.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »