Our Feeds


Wednesday, November 2, 2022

RilmiFaleel

இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என சிலர் கூறுகின்றனர் எனவும், இது முழுக்க முழுக்க பொய் எனவும், இந்த பேரணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக ஆதரவளிக்கும் என்பதோடு, ஐக்கிய மக்கள் சக்தியானது நூறு வீதம் தமது ஒத்துழைப்பை வழங்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

அடக்குமுறைக்கு எதிராக தனித்து நின்று போராடக் கூடாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

ஒதுங்கி, தனிமைப்பட்டு குறுகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலவும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

நாளைய தினம் இடம் பெறும் பேரணி ஓர் அமைதி வழிப்பேரணி எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதனை அடக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராக இருந்தால், உடனடியாக அந்த தயார்படுத்தல்களை வாபஸ் பெற வேண்டும் எனவும், அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால், அதற்கு எதிராக மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனநாயக, அமைதி வழிப்பேரணியை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அடக்குமுறையின் பிதாக்கள் ராஜபக்சக்களே எனவும் தெரிவித்தார். 

சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றியே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சக்களும் மொட்டுவின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுமே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (01) இடம் பெற்ற அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »