Our Feeds


Thursday, December 22, 2022

ShortTalk

மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன



மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு 45 ரூபா – 46 இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டண உயர்வு 56.90 ஆக அமையும் என அவர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.


நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விரிவான அறிக்கையொன்று அமைச்சரவைக்கு கையளிக்கப்படும் என்றார்.


“அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், அநேகமாக 2023 ஜனவரி 2ஆம் திகதி, மின்கட்டண உயர்வு ஏன் தேவைப்படுகிறது, எந்த விதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான அறிக்கை மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும். மேலும் 2023 ஜனவரியில் விலை திருத்தம் கண்டிப்பாக நடைபெறும்” எனவும் அவர் கூறினார்.


அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன், அந்த அறிக்கை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


அடுத்த ஆண்டு (2023) வறட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அலகு ஒன்றுக்கு ரூபா 56.90 முன்மொழியப்பட்டது என்றும் அவர் கூறினார்.


“இதை முடிந்தவரை குறைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரு அலகுக்கு ரூபா 45-46 வரை குறைக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றார்.


இந்த ஆண்டு (2022) ஓகஸ்டில் விலைத் திருத்தம் நடைமுறைக்கு வந்த போதிலும், இலங்கை மின்சார சபை இன்னும் நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும், எனவே கட்டண அதிகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »