Our Feeds


Wednesday, December 21, 2022

ShortTalk

கொழும்பு மாநகர சபை வரவு - செலவுத் திட்டம் 88 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.



2023ம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் 88 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின் கீழ் செயற்படும் கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவினால் நேற்று காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது. மாலை 6 மணி வரை நடந்த விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெற்றது. 

மாநகர சபையில் மேயர் உட்பட மொத்தமாக 119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். வாக்கெடுப்பில் மொத்தமாக 100 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வாக்கெடுப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சமாதான கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சியில் இருக்கும் சுயாதீன உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்கள் மாத்திரம் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். 

அதன் பிரகாரம், மொத்தமாக அளிக்கப்பட்ட 100 வாக்குகளில் 94 வாக்குகள் ஆதரவாகவும், 6 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில், 88 மேலதிக வாக்குகளால் கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 17 ஆயிரத்து 854.99 மில்லியன் ரூபாவாகவும், (17,854,991,000 ரூபா) மொத்த செலவு 17 ஆயிரத்து 854.09 மில்லியன் ரூபாவாகவும் (17,854,087,350 ரூபா)  மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »