Our Feeds


Sunday, December 11, 2022

News Editor

புத்தாண்டுக்கு முன் வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்


 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

புத்தாண்டுக்கு முன்னர் இது குறித்த அறிவித்தல் நிச்சயம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா வீரகேசரிக்கு தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இம்மாதம் இறுதி வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய பெப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழு வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை அறிவிப்பதற்கு முன்னர் மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வினவிய போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டமைக்கமைய உரிய நேரத்தில் நிச்சயம் வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்படும். அந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்திற்குள் நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்படாகும். தேர்தலை நடத்துவதற்கு எக்காரணியும் தடையாக இல்லை.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு உள்ளது.

அதற்கமையவே ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் ஜனவரியில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »