Our Feeds


Friday, December 30, 2022

ShortNews

அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட பாடசாலையை மூடுமாறு மிரட்டும் முஸ்லிம் MP - பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு குற்றச்சாட்டு!



(இஸ்லாமாபாத் நிருபர்)


அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் மிரட்டுகிறார் என்று  அப்பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் எஸ்.எம். லாபீர் குற்றம் சாட்டுகிறார்.

அக்கரைப்பற்றில் வியாழக்கிழமை (டிச 29) இரவு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து கல்விகற்க முடியாது என்பதனால் பிரதேசத்தில் உள்ள முக்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்கள் இணைந்து எங்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுவதற்கு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான முஸ்லிம் அரசியல்வாதியொருவர் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார்.

கடந்த 2015 இல் இப்பாடசாலையை உருவாக்க நடவடிக்கைளை மேற்கொண்டு 2018 இல் இருந்து இந்த பாடசலையை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பூரண அனுமதியுடன் இயங்கவைத்து வருகின்றோம்.

மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி உட்பட பல்வேறு அரச அதிகாரிகள் நன்றாக ஆராய்ந்த பின்னரே இந்த பாடசாலையை உருவாக்க அனுமதி வழங்கினர்.

இப்போது அந்த அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுக்கும் நிலையில் குறித்த முன்னாள் அமைச்சர் செயற்படுகிறார்.

பாடசாலைக்கான காணி விடயத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கும் அவர் இதுவிடயத்தில் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

அரசாங்க அதிகாரிகளை மிரட்டும் இவரது செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியல் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எந்த அரசியல்வாதியும் இப்படியான காட்டுமிராண்டித்தனமான செயலை செய்ய அனுமதிக்க முடியாது.

இவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம். மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் இதுதொடர்பில் அவர் பேச முயன்று மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் மற்றும் ஏனைய எம்.பிக்களுடன் பிரச்சினை ஏற்பட்டதாக அறிகின்றோம். எந்த ஒரு நிதானமான மனிதரும் பாடசாலைகளை மூட யோசிக்க மாட்டார்கள். ஆனால் குறித்த அரசியல்வாதி யோசிக்கிறார்.

இந்த பாடசாலை விடயத்தில் குறித்த அரசியல்வாதி தொடர்ந்தும் சிக்கல்களை கொடுத்தால் ஜனாதிபதி செயலகத்தின் முன் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகிய நாம் அனைவரும் திரண்டு போராடுவோம்.

எங்களது பாடசாலை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த வலயத்தில் உள்ள 72 பாடசாலைகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறிக்கொண்டு வருகின்றது.

திறமையான மும்மொழி ஆற்றல் கொண்ட அதிபரை பாடசாலைக்கு அதிபராக கொண்டுவந்துள்ளோம். நாட்டின் இன்றைய நெருக்கடியிலும் பாடசாலையில் பௌதீக வள அபிவிருத்தி இடம்பெறுகின்றது. இவைகளெல்லாம் தான் குறித்த அரசியல்வாதி போன்றவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கட்டிடங்களுக்கு கழிவெண்ணெய் ஊற்றி அசிங்கப்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் செய்யும் இவர்கள் யார் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மாகாண சபை கலைய இருக்கும் இறுதி தருவாயில் முன்னாள் மாகாண பணிப்பாளராக இருந்து மாகாண கல்வியமைச்சராக இருந்தவரின் உதவியுடன் பாடசாலையின் பெயரையும் எவ்வித உரிய முறைகளுமின்றி அடாத்தாக மாற்றினார்.

இப்படி இந்த பாடசாலை மீது பலரும் அநியாயங்களை செய்து வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் நாங்கள் யாரையும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்டவர்களை அமைச்சரவையில் இணைந்துக்கொண்டால் நாடு நாசமாகிவிடும்.

தனது சுயநலவாத தேவைக்காக சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபையை பெற்றுத்தருவதாக ஏமாற்றியதுடன் அதியுச்ச நிர்வாக திறமையும் சிவில் நிர்வாக சேவையில் உயர் தேர்ச்சியும் கொண்ட ஏ.எல்.எம். சலீம் எனும் ஆளுமையை இரண்டும் கெட்ட நிலைக்கு தள்ளிவிட்டு இப்போது பிரச்சினைகளை உருவாக்கும் அரசியல்வாதி உல்லாசமாக கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.

கல்வியின் அருமை தெரியாத இவரை கடந்த காலங்களில் கல்வி பிரதியமைச்சராக நியமித்திருந்தார்கள். இவருக்கு இனிவரும் காலங்களில் அமைச்சுப்பதவி வழங்கினால் அதைவிட அநியாயம் எதுவுமில்லை என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை அறிய குறித்த முஸ்லிம் அரசியல்வாதியிடம் பல்வேறு தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்டும் அது பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »