Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

இமாலய பிரதேசத்தில் நில நடுக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கத்தை கொழும்பிலும் உணரும் நிலை ஏற்படும் - பெரிய கட்டிடங்களில் இருப்போர் உடனடியாக வெளியேறிவிட வேண்டும்!



(எம்.மனோசித்ரா)


இந்தியாவின் வடக்கில் இமாலய பிரதேசத்தில் நில நடுக்கம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அப்பகுதியில் நில நிடுக்கம் ஏற்பட்டால் அதன் தாக்கத்தை கொழும்பிலும் உணரக் கூடியதாக இருக்கும். 

எனவே நில அதிர்வுகள் உணரப்பட்டால் உயர் கட்டடங்களில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்று சிரேஷ்ட புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த வாரம் புத்தல பிரதேசத்தில் சில நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இலங்கையின் பிரதான புவியியல் நில தட்டுக்களுக்கிடையிலான எல்லையிலேயே இவ்வனைத்து நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. 

இவை பல மில்லியன் ஆண்டுகளாகக் காணப்படுபவையாகும். அத்தோடு இவை முன்னைய காலங்களில் செயற்திறன் கொண்டவையாகக் காணப்பட்டிருக்கலாம் என்று 1984இல் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் சி.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள வரிபடத்தை அவதானிக்கும் போது அவை  புவியியல் நில தட்டுக்களுக்கிடையிலான எல்லையிலேயே பதிவாகியுள்ளமையை தெளிவாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இந்தியாவின் வடக்கில் இமாலய பிரதேசத்தில் 8 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகக் கூடும் என அந்நாட்டு புவிசரிதவியல் திணைக்களமொன்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய  இமாலய பிரதேசத்தில் நில நடுக்கம் ஏற்பட்டால் அது எவ்வாறு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். அவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டால் அதனை இலங்கையில் குறிப்பாக கொழும்பில் உணர முடியும்.

எனவே எதிர்பாராத விதமாக அவ்வாறு நிலநடுக்கம் எதனையும் உணர்ந்தால் உயர் கட்டடங்களில் தொழில் புரிபவர்கள் உடனடியாக அவற்றிலிருந்து வெளியேறிவிட வேண்டும். 

ஒரு சில செக்கன்களுக்கு மாத்திரமே நில அதிர்வுகள் ஏற்படும். எனவே பாரிய கட்டடங்களிலிருந்து வெளியேறுவதற்கு அந்த நேரம் போதுமானதாக இருக்காது. எனவே இது தொடர்பில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »