Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள வகையில் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் - வேலுகுமார் MP



"தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்." தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.


கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், 

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அதிகார மோதலை ஏற்படுத்தி இருக்கின்றது. 

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தாலும், அதன் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

குறைந்த பட்சம் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் நடைபெறுமா? இல்லையா? என்பதை கூட அறிவிக்க முடியாத நிலையே தென்படுகின்றது.

தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போல நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.

இன்று தேர்தலை முன்னெடுக்க போதிய பணம் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. அதே போன்று நடைபெறவுள்ள தேர்தலில் எண்ணாயிரத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 

அவர்களுக்கான கொடுப்பனவை செய்வது மிகப்பெரிய செலவை நாட்டுக்கு ஏற்படுத்துகின்றது. அத்தகையதொரு செலவினம் தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதிலும் யதார்த்தபூர்வமான உண்மை உள்ளது. 

அவ்வாறாயின் இப்போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கு காலத்திற்கு பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும். அதனை விட்டு தேர்தலை அறிவித்து, நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலை ஒன்றை ஏற்படுத்தி, மக்களிடையில் சுமுகமற்ற நிலை தோன்றுவதற்கு வழிவகுப்பது பொருத்தமானதல்ல.

இன்றைய சூழ்நிலையில் கிடைத்திருக்க கூடிய கால அவகாசத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மீண்டும் விகிதாசார முறை தேர்தலுக்கு செல்ல முடியும். அதன் போது உடனடியான எல்லை நிர்ணய பிரச்சினை எழாது. 

உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை மிக இலகுவாக செய்ய முடியும். பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினர் இம்முறைமைக்கு ஆதரவாகவும் உள்ளனர். 

எனினும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை நிலைநிறுத்திக் கொள்ளும், வறட்டுத்தனமான கௌரவ பிரச்சினையே இதற்கு தடையாக உள்ளது. 

இப்போதாவது இவர்கள் திருந்தி, நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரயோசனமான ஒன்றை செய்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது இத் தேர்தல் நடத்தப்பட்டாலும், மேலும் பல ஆண்டுகளுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்வதாகவே அமையும். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »