கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு போலியான அழைப்பு விடுத்தாக கூறப்படும் 14 வயது பாடசாலை மாணவனை விமான நிலைய பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.
குறித்த பாடசாலை மாணவர் நேற்று (25) விமான நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பை விடுத்து, விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது, சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
களுபோவில பிரதேசத்தில் வசித்துவரும் சந்தேகநபரான மாணவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, பின்விளைவுகளை உணராமல் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு குறித்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என சிறுவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து, கடுமையாக எச்சரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.