(எம்.எம்.சில்வெஸ்டர்)
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின் (ஒசுசல) 26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 2021 ஆம் ஆண்டில் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர , பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு அரச மருந்தகங்களில் 2020 ஆம் ஆண்டு, இலாபம் ஈட்டி இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இதுகுறித்து, தேசிய கணக்காய்வு அலுவலகம் அரச மருந்தக கூட்டுத்தாபன நிர்வாகத்திடம் வினவியிருந்தபோது, கெரோனா அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் மருத்துவப் பொருட்கள் சேதம் மற்றும் காலாவதியானதே இழப்புக்கு முக்கியக் காரணம் என விளக்கமளித்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்தக ஊழியர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. எனினும், ஊழியர்களின் செலவுகள் 10 முதல் 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர மருந்தகத்தின் ஊழியர்களின் செலவு கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 47 இலட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும், இது அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் இழப்பை நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
