இலங்கையின் 1979ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்காக இலங்கையின் நாடாளுமன்றம் முன்வைத்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் கடுமையாக குறைக்கும் விதத்தில் காணப்படுகின்றது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த தனது இணைஅமைப்புகளுடன் சேர்ந்து உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அதிகாரிகள் முன்மொழியப்பட்ட நகல்வடிவை மீளப்பெறவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்ச் 17 ம் திகதி இலங்கையின் பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் மாற்றீடும் செய்யும் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது, என தெரிவித்துள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் உத்தேச சட்டமூலத்தை தொழிற்சங்கங்கள் மனித உரிமை அமைப்புகள் சிவில் சமூகத்தினர் சட்டத்துறையினர் ஊடகசுதந்திரத்திற்காக குரல்கொடுப்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் விமர்சித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையில் தற்போது காணப்படும் ஸ்திரமின்மைக்கு மத்தியில் இந்த உத்தேச சட்டமூலம் உடன்படமறுப்பவர்கள் சிவில் சமூகத்தினர் மீது ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கு பயன்படலாம் என தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலம் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணங்களை சர்வதேச வழிகாட்டுதல்களிற்கு அப்பால் விஸ்தரிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் பொதுப்பயன்பாட்டிற்கான இடத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவது அத்தியாவசிய சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டவிரோதமானது என கருதப்படும் ஒன்றுகூடலில் பங்கேற்பது போன்றவற்றையும் சட்டமூலம் பயங்கரவாதத்துடன் சேர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
