Our Feeds


Thursday, May 11, 2023

News Editor

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு!


 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.


கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருந்த சுமார் 5,000 பேருக்கான நட்டஈடு இம்முறை வழங்கப்படவுள்ள நிலையில், இன்று 30 பேருக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.ஏனையோருக்கு காசோலைகள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளன.


குறித்த கப்பல் விபத்தினால் கடலில் கலக்கப்பட்ட பல்வேறு கழிவுப் பொருட்களினால் வலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக 20 கடற்றொழிலாளர்களுக்கு கப்பலின் காப்புறுதி நிறுவனத்தின் நட்டஈட்டுத் தொகையும் இதன் போது வழங்கப்பட்டது.


இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக கப்பல் காப்புறுதி நிறுவனத்தினால் 3068 மில்லியன் ரூபா (ரூ. 300 கோடிக்கும் அதிக தொகை) வழங்கப்பட்டுள்ளதுடன் முதல் மூன்று கட்டங்களில் 1463 மில்லியன் ரூபா (ரூ. 146 கோடி) வாழ்வதாரத்தை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


நான்காம் கட்ட நட்டஈட்டு கொடுப்பனவிற்காக கப்பல் காப்புறுதி கம்பனியால் இலங்கை அரசுக்கு 1605 மில்லியன் ரூபா (ரூ. 160.5 கோடி) வழங்கப்பட்டுள்ளதுடன், நான்காம் கட்டம் நிறைவடையும் போது வாழ்வாதாரத்தை இழந்த கடற்றொழிலாளிக்கு, தொழில்முறையின் பிரகாரம் தலா ரூ. 112,500 முதல் ரூ. 295,000 வரை கிடைக்கவுள்ளது.


சுமார் 22 நாட்கள் மீன்பிடி தடை விதிக்கப்பட்ட நீர்கொழும்பு களப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் ஆகக் குறைத்தது ரூ. 45,000 நட்டஈட்டுத் தொகை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


அதேவேளை, கடற்றொழில் சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் மீன் வியாபாரிகள், கருவாடு உற்பத்தியாளர்கள், மீன்பிடி வலை விற்பனையாளர்கள், படகு திருத்துனர்கள் போன்றோருக்கு மீன்பிடி தடையால் ஏற்பட்ட பாதிப்பிற்காக அவர்களது தொழில் முறைகளின் பிரகாரம் தலா ரூ. 22,500 முதல் ரூ. 336,000 வரை நட்டஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு நேரடியாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட 06 அறிக்கைகள் கடற்றொழில் அமைச்சினால் காப்புறுதி நிறுவனத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


முதலாவது அறிக்கை விபத்து ஏற்பட்டு இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 06 ஆவது அறிக்கை கடந்த 2022 ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.


இக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளருமான தம்மிக்க ரணதுங்க மற்றும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரினால் கடற்றொழில் அமைச்சரிடம் இந் நிகழ்வின்போது கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, மேலதிக செயலாளர் நாமல் தலங்கம, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »