Our Feeds


Saturday, May 20, 2023

ShortTalk

இலங்கை பாரதூரமான பணவீக்கத்தை சந்திக்க வேண்டி வரும் - வெரிட்டே ரிசர்ச் அமைப்பு கடும் எச்சரிக்கை!



(நா.தனுஜா)


லங்கை மிகவும் ஆழமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தவறும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத வகையில் மிகவும் உயர்வான பணவீக்க நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். இது வட்டி வீதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கடன் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி உதவிச் செயற்றிட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அந்த நிதியை முழுமையாக பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. 

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மீள்செலுத்துகை நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஸ்திரத்தன்மை குறித்த மதிப்பீட்டின் பிரகாரம், கடந்த 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாக காணப்பட்ட கடன்களின் அளவு 2028ஆம் ஆண்டில் 101.3 சதவீதத்தினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேபோன்று 2022 - 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வட்டிவீதமானது 2.5 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடையும் என்றும், இவ்வாண்டின் இறுதியில் வட்டி வீதப் பெறுமதி கடந்த 2019ஆம் ஆண்டில் காணப்பட்டதையொத்த நிலையை அடையும் என்றும் மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டில் எதிர்வுகூறப்பட்டிருப்பதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இலங்கை 100 கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டியிருப்பதாகவும், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 25 கடப்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு, அவற்றில் 10 கடப்பாடுகள் குறித்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாததன் காரணமாக அவற்றின் வெற்றிகரமானதன்மை குறித்து மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஸ்திரத்தன்மை குறித்த மதிப்பீட்டின்படி, மூன்று வருடங்களுக்குள் நாட்டின் அரச கடன்களின் அளவு கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட நிலையை அடையும் என்றும், கடந்த ஆண்டு 9.7 சதவீதமாக காணப்பட்ட பொதுக் கடன்களுக்கான வட்டிவீதம் 2028ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. 

அத்தோடு, இலங்கை மிகவும் ஆழமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தவறும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத வகையில் மிகவும் உயர்வான பணவீக்க நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் என்றும், இது வட்டி வீதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கடன் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்றும் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »