Our Feeds


Friday, May 26, 2023

SHAHNI RAMEES

ஷாப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை இன்று...!

 




வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான தடயவியல்

பிரேத பரிசோதனை இன்றைய தினம் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.


மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் விசேட வைத்திய நிபுணர்கள் குழு முன்னிலையில் இந்த பரிசோதனை இடம்பெறவுள்ளது.



கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர், மர்மமான முறையில் மரணித்த தினேஷ் ஷாப்டரின் சடலம் நேற்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டது.


 


தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.


 


குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.


 


இந்தநிலையில், நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.


 


வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி மீட்கப்பட்டார்.


 


பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 


அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »