Our Feeds


Monday, May 22, 2023

ShortNews Admin

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை ஆட்சிக்கு கொண்டுவர இனவாதம், மதவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது - அனுரகுமார(இராஜதுரை ஹஷான்)


மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம், மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்கள் விடுதலைக்கான மக்கள் அலை குறைவடைந்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் முடிவடைந்து விட்டது என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் கூட்டத்தால் மக்கள் முன்னணி தோற்றம் பெறவில்லை.மக்களின் நம்பிக்கையை கொண்டு மக்களாதரவை தற்போது ஒன்றுத்திரட்டியுள்ளாம்.எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைவடைய செய்ய மாட்டோம்.

 வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்றை அனர்த்தத்தினால் நாட்டு மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை.அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இந்த நிலையை இனியாவது மாற்றியமைக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மொத்த சனத்தொகையில் 68 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய மருந்து கொள்வனவை புறக்கணித்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளை வரையறைத்துள்ளார்கள்.ஆகவே பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கும்,சமூக கட்டமைப்பின் உண்மை தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.இதனால் சமூக விரோத செயல்கள் தீவிரமடைந்துள்ளன.ஒரு நாடு பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுக்கும் போது சமூக விரோத செயற்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறும்.பிரேசில் நாட்டிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

யுத்த காலத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதை போன்று பொருளாதார அநாதைகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.2021 ஆம் ஆண்டு 13 இலட்சம் பெண்கள் வெளிநாட்டு பணி பெண்களாகவும்,2022 ஆம் ஆண்டு 74 இலட்சம் பெண்கள் பணி பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.இதுவே சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை.ஆனால் ஜனாதிபதியோ சுபீட்சமான எதிர்காலம் என்று பொருளாதாரத்தை முன்னேற்றி விட்டதாக கருத்து தெரிவித்து தன்னை காட்சிப்படுத்தி உலகத்தை வலம் வருகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.வெளிநாட்டு அரச முறை கடன்களை செலுத்தல்,டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல்,அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி ஆகிய மூன்று காரணிகளுக்காகவே டொலர் அத்தியாவசியமானது.

அரசாங்கம் இந்த மூன்று செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளது.ஆகவே டொலர் கையிருப்பு மிகுதியாகும்.அதை கொண்டே எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.ஆகவே இது நிலையான பொருளாதார தீர்வு அல்ல பெற்றுக்கொண்ட அரசமுறை  நிச்சயம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடித்தார்கள்.மக்களால் வெறுக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ என மதபோதகர் குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இவர் பல முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக குறிப்பிட்ட ஊடகங்கள் இவர் விடயத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »