உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீங் போட்டிகளில் மோதின.
லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டொப்-3 இடங்களை பிடித்த சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், 'பி' பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சுப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.
ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அயர்லாந்து, அமெரிக்கா, நேபாளம், யுஏஇ அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணிகள் 7 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இறங்கின. இதில் 7-வது இடத்துக்கான போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்வதற்கான முதல் அரையிறுதி போட்டியில் அயர்லாந்து - அமெரிக்க அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி அயர்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 196 ஓட்டங்களுக்கு ஒல் அவுட் ஆனது. அமெரிக்க அணி தரப்பில் சுஷாந்த் மோதானி, சைதேஜா முக்கமல்ல ஆகியோர் தலா 55 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 34.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 197 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று 7-வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து தரப்பில் பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்தார்.
