Our Feeds


Thursday, June 22, 2023

ShortNews

மூத்த ஊடகவியலாளர் முக்தார் மீதான தாக்குதல் - முக்கிய சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு.



மூத்த ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.


தாக்குதலுக்கு இலக்கான ஊடகர் ஏ.எல்.எம்.முக்தார் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சி.சி.ரி.வி. காட்சி என்பவற்றுக்கு அமைவாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரின் சகோதரர் ஒருவரே மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டு, இன்று வியாழக்கிழமை (22) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.


இதன்போது குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்த நீதவான், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முக்தார் சார்பில் முஹம்மட் றமீஸ், முஹம்மட் சுவாஹிர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தனது வீட்டிற்கு அண்மித்த வீதியில் பேரக் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், கூரிய ஆயுதத்தினால் (கத்தி) ஊடகர் ஏ.எல்.எம்.முக்தாரின் கழுத்துப் பகுதியை வெட்டி, காயங்களை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து அவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.


(சாய்ந்தமருது செய்தியாளர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »