மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (08) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
22 மாவட்டங்களில் 928 உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
தேர்தலையொட்டி 65,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும், மாநில பொலிஸார் 70 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், வாக்குப் பதிவு தொடங்கியது முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
பிர்பும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் சேதப்படுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. முர்சிதாபாத் வாக்குச் சாவடியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
சிந்த்ராணியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப் பெட்டிக்குள் சிலர் தண்ணீரை ஊற்றினர். மால்டா மாவட்டம் இங்கிலிஷ் பஜார் பகுதியில் உள்ள இரு வாக்குச் சாவடிகள் மீது கற்கள் வீசப்பட்டன.
வன்முறை காரணமாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
