Our Feeds


Thursday, July 6, 2023

SHAHNI RAMEES

மக்கள் பணத்தை திட்டமிட்டு திருடும் அரசாங்கம் - உதயகுமார் எம்.பி குற்றச்சாட்டு

 

நாட்டில் உள்ள பல இலட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது “திருட்டு சம்பவம் இடம்பெற்ற பின்னர் அதனை கண்டுபிடிக்க வந்தவர்களையும், திருட்டுக் கும்பலில் சேர்ந்து பங்காளியாகுமாறு’ அழைப்பதற்கு சமன் என மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

EPF இன் நோக்கமானது, பணியாளரின் ஓய்வூதியக் கட்டத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பணியாளரின் பங்கிற்கு வெகுமதி அளிப்பதும் ஆகும். ஆனால் அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் காரணமாக கடன் கழிப்பு செய்யப்பட்டு கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

 

அப்படி பார்க்கையில் இங்கையின் மொத்த உள்நாட்டுக் கடன் 12000 பில்லியன்களாகும். (US $ 42.1 B) இதில் 27 சதவீத கடன் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.  

 

எனவே, இந்த EPF/ETF கடன் மறுசீரமைப்பு மொத்த உள்நாட்டு கடனில் (US$ 19.5 B) ஆகவே, கடன் மறுசீரமைப்பில் திட்டத்தில் நிச்சயமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாரிய இழப்பு ஏற்படும் என்பது தெளிவாகிறது.

 

குறிப்பாக, 25 இலட்சம் ஊழியர் சேமலாப நிதி பங்குதாரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி விகிதத்தை இழப்பர். அரசாங்கம் 2025 க்கு பின்பு அவர்களுக்கு 9% வட்டி மட்டுமே வழங்குவதாக கூறுகிறது.

 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினால் எதிர்வரும் 2038ஆம் ஆண்டுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து (12 ட்ரில்லியன் ) 12 இலட்சம் கோடி ரூபாவை இழக்க நேரிடும்

 

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியே வழங்க முற்பட்டாலும் குறைந்தது 12% சதவிகிதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தம் உடனடியாக செய்யப்பட வேண்டும்.

 

அரசாங்கம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு நாட்டின் செல்வந்தர்களை விட்டுவிட்டு நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் இறுதி மூச்சாக கருதப்படும் ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்துள்ளது.

 

சரியாயின் EPF, ETF பணத்தில் கை வைப்பதற்கு முன்னர் அந்த நிதிக்கு உரிமையாளர்களான தொழிலாளர்களிடம் அரசாங்கம் அனுமதி கோரியிருக்க வேண்டும். ஒருவரின் வைப்பு பணத்தில் அவரை கேட்காது அவருக்கு தெரியாது கைவைப்பது ‘திருட்டு செயல்’ அன்றி வேறு என்ன?

 

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தத்தின் போது உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்படாது கூறியது பின்பு, அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது EPF/ETF க்கு பாதிப்பு ஏற்ப்படாது என்றும் பின்பு கடன் மறுசீரமைப்பு அனைத்து தரப்பினரும் சம்மாக உள்ளடக்கப்படுவர் என கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து சுமையையும் EPF/ETF தலையில் ஏற்றி உள்ளது.

 

எனவேதான், இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தை திருடியுள்ளது என நாம் குற்றச்சாட்டு முன் வைக்கிறோம். EPF, ETF பணத்தை யானை விழுங்கியது என்ற குற்றச்சாட்டு போலதான் கடன் மறுசீரமைப்பில் EPF, ETF பணம் திருடப்பட்டுள்ள குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

 

எனவே, அன்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று அதனை கை உயர்த்தி ஆதரித்துள்ளதன் மர்மம் என்ன?

 

ஆகவே, திருட்டுக் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பாரிய திருட்டை செய்துவிட்டு, அதற்கு ஆதரவு வழங்கி விட்டு, எங்களையும் திருட்டுக் கும்பலில் சேருமாறு அழைப்பது கேவலமான செயலாகும். இதற்கு ஒருபோதும் நாம் இணங்க மாட்டோம். என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »