Our Feeds


Friday, July 14, 2023

SHAHNI RAMEES

குருந்தூர்மலையில் பதற்றம் – பொங்கல் விழாவை தடுக்கும் முயற்சியில் பொலிஸார்

 

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தி வருவதால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

 

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

 

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.

 

அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

 

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை.

 

இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி வேண்டினர்.

 

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்தனர்.

 

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, முல்லைத்தீவு பொலிசார் பொங்கலுக்கு தடையேற்படுத்தினர். சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்தனர்.

 

இதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »