மகளிருக்கான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.
நியூ ஸிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைப் பெற்ற சமரி அத்தபத்து, 3 ஆவது போட்டியில் 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது. 3 போட்டிகளிலும் அவர் மொத்தமாக 248 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.
சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக, ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.
