Our Feeds


Saturday, August 19, 2023

ShortNews Admin

வட மாகாணத்தில் சேவை செய்த 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேற்றம்.



வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்தார்.


வவுனியா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டு கல்விக்காக சென்று வராதவர்களும் உள்ளனர். அத்துடன் 20 தாதியர்களும் வெளியேறியிருக்கின்றனர்.

வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம். அத்துடன் அண்மைக்காலத்தில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 

இவ்வருடம் தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை காணப்படும். ஆகவே, இந்த பகுதிக்கு புதிய தாதிகள் வரமாட்டார்கள். இதனால் நாம் சிக்கலான சவாலை எதிர்கொள்வோம்.

அத்துடன், வெளிநாடுகளில் தாதிகளை வரவேற்பதனால் அவர்கள் வேலையை முடிவுறுத்தி வெளியேறலாம். எனவே, எதிர்வரும் காலம் சவாலை எதிர்கொள்ளும் காலமாக அமையும்.

அத்துடன், இலங்கை பூராகவும் மருந்து தட்டப்பாடு ஏற்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் 90 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு ஒரு நாளைக்கு 40 பேருக்கு செய்யப்படுகின்றது. இதனை செய்வதற்கான திரவத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது அது தேவையான அளவு உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மருந்து தட்டுப்பாடு வட மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலையிலும் ஏற்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் அசௌகரியத்தினை சந்தித்திருந்தனர். 

தற்போது நிலைமை ஓரளவு சுமூகமாகி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு சில கிளினிக் மருந்துகள் மற்றும் விசேட வைத்தியத்திற்காக வழங்கப்படும் மருந்தை பெற்று வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்களிடம் மருந்துகளை பெற்று சிகிச்சையை வழங்கி வருகின்றளர் எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »