முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தியளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டபின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலைமாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளில் 13உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அதன் பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 05ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் முல்லைத்தீவு மாவடத்தில் நிலவிய சீரற்ற காலநிலைகாரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமாகி, செப்ரெம்பர் 06ஆம் திகதி இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் கடந்த ஜூலைமாதம் 13ஆம் திகதி முல்லைத்திவு நீதாமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைசார்ந்தவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கு அவ்வாறு யாழ் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைசார்ந்தவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
தற்போது மக்கள் மத்திலில் தொல்லியல் துறையினர் மீது பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஏன் எனில் குருந்தூர்மலை விவகாரத்தில், தொல்லியல் துறை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கட்களையொன்றை வழங்கியிருந்தது. அக் கட்டளையில் தொல்லியல் துறையினர் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மூன்று தடவைகள் மீறியதுடன், குருந்தூர் மலையில் விகாரை கட்டுவதற்கு ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் தொல்லியல் துறையினர் இந்த அகழ்வுப் பணி விடயத்திலும் சரியாக நடந்துகொள்வார்களென நாம் எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை இந்த மனிதப் புழி விவகாரத்தில் சர்வதேசகண்காணிப்புத் தேவை எனவும், சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் எமது தமிழ் மக்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாங்கள் நீதிமன்றையும், சட்டவைத்திய அதிகாரிகளையும் மதிக்கின்றோம். ஆனால் அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தில் சரியாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.
குறிப்பாக இங்கு பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இந் நிலையில் மக்கள் சார்பாக அங்கு சட்டத்தரணிகள் மாத்திரமே புதைகுழி வளாகத்திற்குள் செல்லமுடியும். மக்களின் பிரதிநிதிகளாக வேறு யாரும் புதைகுழிப் பிரதேசத்திற்குள் செல்லமுடியாது.
எனவே எமக்கு சந்தேகங்கள் எழாதவாறு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெறுவதுடன், உண்மைத் தன்மை வெளிப்படவேண்டும்.
சர்வதேச மற்றும், ஐ.நாவின் கண்காணிப்புக் குழுக்கள் இல்லாமல் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதில் எமக்குத் திருப்தி இல்லை என்பதையும், தொல்லியல் திணைக்களத்தினையும் நாம் நம்பப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் - என்றார்.