பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்குவது குறித்த செய்திகள் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வினவிய போது, அது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லையென அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. ஆனால் அவர் நிச்சயமாக கட்சியின் நலன்களுக்கு எதிராக செயற்படுகிறார். இது மிகவும் மோசமான விடயமாகும்.
கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து பொன்சேகாவுடன் கலந்துரையாடினார்கள். ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர் யாருடைய கருத்தையும் கேட்பதாகத் தெரியவில்லை” என மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். "ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க விரும்பும் தரப்பினரால் சில கதைகள் விதைக்கப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
