Our Feeds


Monday, January 29, 2024

SHAHNI RAMEES

இன்னும் 02 மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

 

அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில், நாட்டில் சிறு போகத்திலும் பெரும் போகத்திலும் உரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி மானியங்களுக்காக சுமார் 22 பில்லியன் ரூபாவை செலவிட்டோம். அத்துடன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.


அதன்படி 2022ஆம் ஆண்டு 8 மெட்ரிக் டொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் 2023ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. நம் நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை இந்த நாட்டு மக்கள் வருடம் முழுவதும் உட்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நெருக்கடியான நிலையிலும், அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த ஆண்டு அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டைப் போலவே வறட்சி மற்றும் வெள்ளத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வறட்சியால் 65,000 ஏக்கரும், கனமழையால் 100,000 ஏக்கரும் சேதமடைந்துள்ளன. வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. சுமார் 700 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.


மேலும், கனமழையால் பாரிய அளவில் மரக்கறிப் பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும். சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.


மேலும், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம், மானிய விலையில் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

தேயிலைப் பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காக, அனைத்து தேயிலை உரங்களையும் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களான கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »