Our Feeds


Friday, January 26, 2024

SHAHNI RAMEES

இன்று இந்தியாவின் 75வது குடியரசு தின விழா..!

 





இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும்

உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


 

இதனையொட்டி இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் கர்தவ்ய பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


 


முன்னதாக, டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.


 


பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றார். குடியரசு தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகையுடன் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அவரது மனைவியுடன் விழாவுக்கு வருகை தந்தார்.


 


நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை இன்று குடியரசு தின விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.


 


குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.


 


அதன் பின்னர் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. குதிரைப் படை, பீரங்கிப் படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். அதன் பின்னர் மற்ற அணிவகுப்புகள் தொடங்கின. அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »