Our Feeds


Wednesday, January 17, 2024

News Editor

இலங்கையில் முதலீடு செய்ய இதுவே பொருத்தமான தருணம்!


 இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக முன்வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் உயர் மட்ட மற்றும் நிலையான கொள்கையை உத்தரவாதம் செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று (15) இடம்பெற்ற “பசுமை தொழில்நுட்ப மன்றத்தில்” (Green Tech Forum) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

இதனை சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

‘எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுத்தல்’ என்ற தொனிப்பொருளில் தனது உரையை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் உயர் ஆற்றல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு உகந்த முதலீட்டுடன் கூடிய சூழலை ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “வெப்பமண்டல முன்முயற்சி” உட்பட ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இலங்கை தனது நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான இலட்சியத் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

துரித புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் இந்த முழு முயற்சியின் ஒரு முக்கிய அங்கம் என்றும், இது எரிசக்தி பாதுகாப்பிற்கான பாதையில் இன்றியமையாத நடவடிக்கை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »