Our Feeds


Monday, April 15, 2024

News Editor

சாய்ந்தமருதில் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை


 சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களினால் முகநூல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில்  இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வின்  சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளருமான எம்.எஸ்.எம்.சபான் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் கரையோரம் பேணல் திணைக்களம் என்பவற்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து கல் அணை போடும் நடவடிக்கை தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்காக முயற்சி செய்த இணைப்பாளர் சபான், பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் திணைக்கள மாவட்ட பொறியியலாளர், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இயற்கையை நேசிக்கும் மன்றம் நன்றி தெரிவிக்கின்றது.

இதேவேளை, சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

அது மட்டுமல்லாது இந்த சதுக்கத்தோடு இணைந்ததாக காணப்படும் கொங்றீட் வீதியின் ஒரு பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்  இவ்விடத்தில் அமைந்துள்ள மீனவர் பல்தேவை கட்டிடமும் இடிந்துவிழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. 

கடந்த காலங்களில் சாய்ந்தமருது  மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டபோது கல் அணைகள் அமைக்கப்பட்டபோதும் இந்த பிரதேசத்தை அண்டியதாக கடலரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் மருதூர் சதுக்கம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது. 

எனவே தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு மருதூர் சதுக்கம் மற்றும் அதனை  அண்டிய பிரதேசங்களை பாதுகாக்க கரையோரம் பேணல் திணைக்களம்  பிரதேச செயலகம் என்பன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்து பிரதேச அரசியல்வாதிகள் கவனத்திலெடுத்து கல் அணை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் கல் அணை அமைத்து எஞ்சியிருக்கும் கற்களைப் போட்டு முதற்கட்ட ஏற்பாடுகளையேனும் செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »