Our Feeds


Thursday, May 2, 2024

SHAHNI RAMEES

புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப்பணிகள் நிறைவு....!

 

யாழ். - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

 

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.

 

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

 

அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 

அகழ்வின் போது பெண்ணொருவரினுடையது எனக் கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூட்டுடன் செப்பு நாணயங்கள், துணி , அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

 

குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

 

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »