தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயாராக உள்ளேன் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து தமிழ்ப் பொது களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது.
அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது.
அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன் என்றார்.